search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலித் பெண் சமையல்"

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே அரசு பள்ளியில் தலித் பெண் சமைப்பதால் மாணவர்கள் சாப்பிட மறுத்து வீட்டில் இருந்தே மதிய உணவு எடுத்து வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள சேவூர் திருமலைக் கவுண்டன்பாளையம் ஆதி திராவிட காலனியை சேர்ந்தவர் பாப்பாள் (42). அரசு பள்ளி சத்துணவு சமையலர்.

    இவர் ஒச்சம்பாளையம் ஆதி திராவிடர் காலனியில் உள்ள தொடக்க பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வந்தார். அவினாசி வட்டாரத்தில் பணியாற்றி வந்த 19 சமையலர்கள் ஓய்வு பெற்றனர். இதனை தொடர்ந்து பாப்பாள் தனது சொந்த ஊரான திருமலைக்கவுண்டன் பாளையம் அரசு உயர்நிலை பள்ளிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

    சொந்த ஊர் என்பதால் அவர் மகிழ்ச்சியுடன் பணியில் சேர்ந்தார். ஆனால் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என கூறி கிராம மக்களில் ஒரு தரப்பினர் அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனர். சத்துணவு கூடத்தை தாங்களே கைப்பற்றி சமையல் செய்தனர்.

    இந்த போராட்டம் காரணமாக பாப்பாளின் பணி இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அவர் இதற்கு முன் பணியாற்றிய ஒச்சாம் பாளையம் பள்ளிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இதனை கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

    இதனை தொடர்ந்து பாப்பாள் பணி இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பாப்பாளை திருமலைக்கவுண்டன் பாளையம் பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற சப்-கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

    அப்பள்ளியில் பாப்பாள் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில் அவர் சமையலை சில மாணவர்கள் சாப்பிட மறுத்து வருகிறார்கள் அவர்கள் தங்கள் வீட்டில் இருந்தே டிபன் பாக்சில் மதிய உணவு எடுத்து வருகிறார்கள்.

    திருமலைகவுண்டம் பாளையம் அரசு பள்ளியில் மொத்தம் 65 மாணவர்கள் சத்துணவு சாப்பிட பெயர் பதிவு செய்து உள்ளனர். அவர்களில் தற்போது 33 மாணவர்கள் மட்டுமே சத்துணவு சாப்பிட்டு வருகிறார்கள்.

    32 மாணவர்கள் சத்துணவு சாப்பிடவில்லை. அவர்கள் தங்கள் வீட்டில் இருந்தே மதிய உணவு எடுத்து வருகிறார்கள். தலித் பெண் சமைப்பதால் அவர்கள் சாப்பிட மறுப்பதாக கூறப்படுகிறது.

    இது குறித்து சத்துணவு அமைப்பாளரிடம் கேட்ட போது அவரும் 33 மாணவர்கள் தான் சாப்பிடுவதை உறுதி செய்தார். இது தொடர்பாக இன்று பள்ளியில் ஆய்வு பணி நடைபெற உள்ளது.

    அதில் மாணவர்கள் குறைவாக சாப்பிடுவது தெரிந்தால் அதற்கு தகுந்தாற் போல் சாப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    ×